01.052 திருநெடுங்களம் | மறையுடையாய் தோலுடையாய் | திருஞானசம்பந்தர் தேவாரம் |
Panniru Thirumurai Panniru Thirumurai
26.6K subscribers
145,846 views
0

 Published On Jul 11, 2020

01.052 இடர்களையும் திருப்பதிகம் | திருநெடுங்களம் | மறையுடையாய் தோலுடையாய் | திருஞானசம்பந்தர் தேவாரம்

"எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் ஏதாவது ஒரு தடை வருவதைத் தடுப்பதற்கும், எதிரிகள் இல்லாதிருக்க வீண்பழி, அவமானங்களிலிருந்து விடுபடுவதற்கும் ஓதவேண்டிய பதிகம்"

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ நித்யசுந்தரேஸ்வரர், ஸ்ரீ நெடுங்களநாதர்

‪இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மங்கள நாயகி, ஸ்ரீ ஒப்பிலா நாயகி

திருமுறை : முதல் திருமுறை 052 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

பதிக குரலிசை : திரு சிவ மகேஸ்வர ஓதுவார்

திருஞானசம்பந்தர், தொண்டர்களுடன் இக்கோயிலுக்கு வர, தொண்டர்களுக்கு உடல் நிலை குன்றியது. உடல்நிலை சரியாகி கிளம்பும் போது இடி, மின்னல், மழை என்று வாட்டி எடுத்தது. அப்போது சம்பந்தர் பாடியது தான் இடர்களையும் பதிகம்.

அருளாளர்கள் மொழிந்த தமிழுக்கு அற்புத ஆற்றல் உண்டு. திருஞானசம்பந்தரின் தமிழ் எலும்பும் சாம்பலுமாய் குடத்தில் இருந்த பூம்பாவையை உயிருடன் எழுப்பியது, திருமருகலில் பாம்பு தீண்டி இறந்த வைப்பூர் செட்டி மகனுக்கு உயிர் ஊட்டியது, கொல்லி மழவன் மகளின் கொடிய நோயை நீக்கியது, சம்பந்தர் இட்ட தமிழ் ஏடு வைகை நீரில் எதிர் சென்றது, திருநள்ளாற்றுப் பதிகமோ மதுரை நகரின் தீயில் எரியாமல் மெருகுடன் நின்றது. இப்படி எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்திய அந்த அழகுத் தமிழால் ஞானக்குழந்தையார் திருநெடுங்களம் என்னும் திருத்தலத்தில் பாடிய பத்து பாடல்களின் ஈற்றடிகளில் “இடர்களையாய் நெடுங்கள மேயவனே’’ என்று குறிப்பிட்டு திருநெடுங்களத்தான் பாதம் பணியும் அடியார்களின் இடர்களை அவன் போக்கியே தீருவான் என்ற சத்திய வாக்கினைப்(அப்பதிகம் முழுவதும்) பதிவு செய்துள்ளார்.

நாளும் இடர்களின் மத்தியில் உழலும் நாம் அவ்விடர்கள் தீர திருஞானசம்பந்தப் பெருமானார் பாடிய திருநெடுங்களத்துப் பதிகத்தினை, புலர் காலையில் நீராடி, ஈசன் திருவடிவம் முன்பு பூவோடு நீர் கொண்டு பூஜித்து, பாராயணம் செய்வோமாயின் நம் இடர்கள் முழுவதும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகிடும். வாய்ப்பு கிட்டும்போது திருநெடுங்களம் செல்லுங்கள். நெடுங்களத் தான் பாதம் பணிந்து இடர்களையும் பதிகம் ஓதுங்கள். நிச்சயம் அவன் இடர் களைவான்.

துன்பமின்றி இந்த உலகில் அனுதினமும் இன்பமாக வாழ "திருநெடுங்களம்" ஈசன் நமக்கு திருவருள் புரிகிறார் என திருநெடுங்களம் பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் திருஞானசம்பந்தர் "இடர்களையாய் நெடுங்களம் மேயவனே" என வரிக்கு வரி உறுதியுடன் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்று உனைப் பேசின் அல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. ..... (01)

கனைத்தெழுந்த வெண்திரைசூழ் கடலிடை நஞ்சு தன்னைத்
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை
மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும்
நினைத்து எழுவார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. ..... (02)

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்று அடல் கூற்று உதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. ..... (03)

மலை புரிந்த மன்னவன்தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர்சடை ஆரூரா
தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின்தாள் நிழற்கீழ்
நிலை புரிந்தார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. ..... (04)

பாங்கின் நல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி
தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ நின்தாள் நிழற்கீழ்
நீங்கி நில்லார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. ..... (05)

விருத்தனாகிப் பாலனாகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. ..... (06)

கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர் வெங்கணையால்
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடிமேல்
ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. ..... (07)

குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடிமதில் சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர்கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும்
நின்று நைவார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. ..... (08)

வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும் விளங்கிய நான்முகனும்
சூழ எங்கும் நேட ஆங்கோர் சோதியுள் ஆகி நின்றாய்
கேழல் வெண்கொம்பு அணிந்த பெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல் வாழ்வார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. ..... (09)

வெஞ்சொல் தஞ்சொல் ஆக்கி நின்ற வேடம் இலாச் சமணும்
தஞ்சம் இல்லாச் சாக்கியரும் தத்துவம் ஒன்று அறியார்
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
நெஞ்சில் வைப்பார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. ..... (10)

நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர் வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன் மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே. ..... (11)

பதிகப் பலன் : மேலும் மேலும் நீண்டு வளரத்தக்க சடை முடியை உடைய சிவபிரான் எழுந்தருளிய திருநெடுங்களத்தை, பெரியோர் பலர் வாழும் பெரிய வீதிகளை உடைய சிரபுரம் என்னும் சீகாழிப்பதியின் தலைவனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய, நன்மைப் பொருளால் ஆராய்ந்து உணரத்தக்க இப்பாடல்கள் பத்தையும் பாட வல்லவர்களின் பாவங்கள் விலகும்.

ஆலய முகவரி : அருள்மிகு நித்தியசுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருநெடுங்களம், திருநெடுங்களம் அஞ்சல், திருச்சி வட்டம், திருச்சி மாவட்டம், PIN - 620 015.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

show more

Share/Embed