01.116 திருநீலகண்ட திருப்பதிகம் | அவ்வினைக்கு இவ்வினையாம் | சம்பந்தர் தேவாரம் |
Panniru Thirumurai Panniru Thirumurai
26.8K subscribers
47,879 views
0

 Published On Jul 19, 2020

01.116 திருநீலகண்டத் திருப்பதிகம் | அவ்வினைக்கு இவ்வினையாம் | திருஞானசம்பந்தர் தேவாரம்

"நோய்களும் துன்பங்களும் நீங்க ஓதவேண்டிய திருப்பதிகம்."

கொடிமாடச் செங்குன்றூரில் திருஞானசம்பந்தர், அடியார்களுடன் சிலகாலம் தங்கியிருந்தார். அப்பொழுது பனிக்காலம் வந்தது. பல அடியார்களை நளிர் சுரம் பீடித்தது. அதனால் அடியார்கள் வருந்தினர். சம்பந்தரிடம் விண்ணப்பித்தனர். இது கேட்ட சம்பந்தர், "இந்த நளிர் சுரம் வருதல் இந்நாட்டிற்கு இயல்பே என்றாலும், அடியார்களை இந்த நோய் எய்தக்கூடாது. "நீலகண்டமே எந்நாளும் அடியார் இடர் தீர்க்கும் அரிய துணை" என்று எண்ணி "அவ்வினைக்கு இவ்வினை" என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் "வினை தீண்டா! திருநீலகண்டம்!" என்று ஆணையிட்டு அருளினார். உடனே அடியார்களுக்குச் சுரம் தீர்ந்தது மட்டுமல்லாமல் அந்நாட்டிலேயே அந்தச் சுரநோய் தொலைந்தது.

திருமுறை : முதல் திருமுறை 116 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

பதிக குரலிசை : திரு சம்பந்தம் குருக்கள்

இப்பதிகம் கொடிமாடச் செங்குன்றூரில் பாடப்பெற்றிருந்தாலும் பாடல்களில் தலப்பெயர் சொல்லப் பெறாததால், இது தலப்பெயர் இல்லாத பொதுத் திருப்பதிகங்களுள் ஒன்று. கொடிமாடச் செங்குன்றூர் - இத்தலம் இக்காலத்தில் "திருச்செங்கோடு" என்று வழங்கப்பெறுகின்றது.

அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃது அறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம். ..... (01)

காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்
“ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர்” என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம். ..... (02)

முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்
சிலைத்து எமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம். ..... (03)

விண்ணுலகு ஆள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
“புண்ணியர்” என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே
கண் இமையாதன மூன்று உடையீர் உம் கழல் அடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம். ..... (04)

மற்றிணை இல்லா மலை திரண்டன்ன திண்தோள் உடையீர்
கிற்றெமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்
செற்று எமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம். ..... (05)

மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்தி
பிறப்பில் பெருமான் திருந்து அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை ஏத்தும் பணி அடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம். ..... (06)

"இப்பதிகத்தில் எழாவது செய்யுள் சிதைந்து போயிற்று."

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்து உம் கழல் அடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை ஏத்துதும் நாம் அடியோம்
செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள்செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம். ..... (08)

நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர்
தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாம் அடியோம்
சீற்றமதாம் வினை தீண்டப் பெறா திருநீலகண்டம். ..... (09)

சாக்கியப் பட்டும் சமண் உருவாகி உடை ஒழிந்தும்
பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றுவிட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம். ..... (10)

பிறந்த பிறவியில் பேணி எம்செல்வன் கழலடைவான்
இறந்த பிறவி உண்டாகில் இமையவர்கோன் அடிக்கண்
திறம்பயின் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே. ..... (11)

பதிகப் பலன் : மக்கட் பிறப்பெடுத்த இப்பிறவியிலேயே சிவபிரான் திருவடிகளை விரும்பி வழிபடின் முத்திப்பேறு அடையலாம். மீண்டும் பழவினைகளால் பிறப்பு உளதாயின், தேவர்களின் தலைவனாகிய சிவபிரான் திருவடிகளின் பெருமைகளை அறிந்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகச் செந்தமிழ்ப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர்களாயின், அவர்கள் இமையவர்கள் நிறைந்த வானுலகில் அவ்வானவர் கோனொடும் கூடி மகிழும் பதவியைப் பெற்று இன்புறுவர்.

குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

show more

Share/Embed