06.099 திருப்புகலூர் | எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ | திருநாவுக்கரசர் தேவாரம் |
YouTube Viewers YouTube Viewers
26.8K subscribers
1,641 views
0

 Published On Aug 25, 2023

06.099 திருப்புகலூர் | எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ | திருநாவுக்கரசர் தேவாரம்

#SriAgneeswararTemple | #ThiruPugalur | #ThirunavukarasarPathigam

இத்தலத்தில் அக்னி பகவான் இறைவனை நோக்கி தவம் செய்து பேறு பெற்றிருக்கிறார். அக்னி பூஜித்த தலமாதலால் இறைவனுக்கு அக்னீஸ்வரர் என்ற திருநாமம். இத்தலத்தில் வாஸ்து பூஜை செய்வது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இத்தலத்தில் சுந்தரருக்கு செங்கற்களை பொன் கற்களாக மாற்றி கொடுத்து அருளியதாலும் அக்னி பகவான் பாப விமோசனம் பெற்றதாலும் புதியதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து செங்கல் வைத்து மனை முகூர்த்தம் செய்த பிறகே வீடுகட்ட ஆரம்பிப்பது வழக்கம்.

அப்பர்(திருநாவுக்கரசர்) தனது 81-ம் வயதில் இத்தலத்தில் உழவாரப் பணி செய்த போது, இறைவன் சித்திரை சதய நட்சத்திர நாளில் அவருக்கு முக்தி கொடுத்தார். எனவே, இது சதய நட்சத்திர தலமாக விளங்குகிறது.

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ அக்னிஸ்வரர், ஸ்ரீ கோணப்பிரான்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ கருந்தார் குழலி

திருமுறை : ஆறாம் திருமுறை 099 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

பதிக குரலிசை : திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார்

தனது வாழ்நாளின் கடைப்பகுதியை புகலூரில், இறைப்பணி செய்து கழித்து வந்த அப்பர் பெருமானுக்கு, புகலூர் இறைவன் தன்னை அவரது சேவடிக்கீழ் சேர்த்துக் கொள்வான் என்று அவரது உள்ளுணர்வு உணர்த்தியது. அப்போது, தன்னைச் சரண் என்று தொடங்கும் பதிகத்தைப் பாடினார். இந்தப் பதிகத்தின் முதல் பாடலில், புகலூர்ப் பிரானின் திருவடிகளே சரணம் என்று அவனது திருவடிகளைப் பற்றிக் கொண்டேன். அவன் எனக்குப் புரியும் அருட்செயல்களைச் சொல்கின்றேன் கேளுங்கள் என்று கூறுகின்றார். சிவபிரான், தனது பிறவிப் பிணியைப் போக்கி, வினைக்கட்டுகளை அறுத்து, ஏழு நரகத்தில் என்னை கிடக்குமாறு விடாமல் காப்பாற்றி, சிவலோகத்தில் கொண்டு சேர்த்து விடுவான் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.

00:35 எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும் போது உணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே. ..... (01)

04:17 அங்கமே பூண்டாய் அனல் ஆடினாய்
ஆதிரையாய் ஆல் நிழலாய் ஆனேறு ஊர்ந்தாய்
பங்கம் ஒன்றில்லாத படர் சடையினாய்
பாம்போடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய்
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்டச்
சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்
சிங்கமே உன்னடிக்கே போதுகின்றேன்
திருப்புகலூர் மேவிய தேவதேவே. ..... (02)

05:24 பை அரவக் கச்சையாய் பால் வெண்ணீற்றாய்
பளிங்குக் குழையினாய் பண்ணார் இன்சொல்
மை விரவு கண்ணாளைப் பாகம் கொண்டாய்
மான்மறி கை ஏந்தினாய் வஞ்சக் கள்வர்
ஐவரையும் என்மேல் தரவு அறுத்தாய்
அவர் வேண்டும் காரியம் இங்கு ஆவதில்லை
பொய் உரையாது உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே. ..... (03)

06:44 தெருளாதார் மூ எயிலும் தீயில் வேவச்
சிலை வளைத்து செங்கணையால் செற்ற தேவே
மருளாதார் தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய்
மருந்தாய்ப் பிணி தீர்ப்பாய் வானோர்க்கு என்றும்
அருளாகி ஆதியாய் வேதமாகி
அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்தும் காணாப்
பொருளாவாய் உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே. ..... (04)

07:57 நீரேறு செஞ்சடைமேல் நிலாவெண் திங்கள்
நீங்காமை வைத்து உகந்த நீதியானே
பாரேறு படுதலையில் பலி கொள்வானே
பண்டு அனங்கன் காய்ந்தானே பாவநாசா
காரேறு முகில் அனைய கண்டத்தானே
கருங்கை களிற்று உரிவை கதறப் போர்த்த
போரேறே உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே. ..... (05)

09:02 விரிசடையாய் வேதியனே வேத கீதா
விரிபொழில்சூழ் வெண்காட்டாய் மீயச்சூராய்
திரிபுரங்கள் எரிசெய்த தேவ தேவே
திருவாரூர்த் திருமூலட்டானம் மேயாய்
மருவினியார் மனத்துள்ளாய் மாகாளத்தாய்
வலஞ்சுழியாய் மாமறைக்காட்டு எந்தாய் என்றும்
புரிசடையாய் உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே. ..... (06)

10:05 தேவார்ந்த தேவனைத் தேவர் எல்லாம்
திருவடிமேல் அலரிட்டுத் தேடி நின்று
நாவார்ந்த மறைபாடி நட்டம் ஆடி
நான்முகனும் இந்திரனும் மாலும் போற்ற
காவார்ந்த பொழிற்சோலைக் கானப்பேராய்
கழுக்குன்றத்து உச்சியாய் கடவுளே நின்
பூவார்ந்த பொன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே. ..... (07)

11:23 நெய்யாடி நின்மலனே நீலகண்டா
நிறைவுடையாய் மறைவல்லாய் நீதியானே
மையாடு கண்மடவாள் பாகத்தானே
மான்தோல் உடையா மகிழ்ந்து நின்றாய்
கொய்யாடு கூவிளம் கொன்றை மாலை
கொண்டு அடியேன் நான் இட்டுக் கூறி நின்று
பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே. ..... (08)

12:30 துன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நீற்றாய்
துதைந்து இலங்கு வெண்மழுவாள் கையிலேந்தி
தன் அணையும் தண்மதியும் பாம்பும் நீரும்
சடைமுடிமேல் வைத்து உகந்த தன்மை யானே
அன்ன நடை மடவாள் பாகத்தானே
அக்காரம் பூண்டானே ஆதியானே
பொன்னம் கழலடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே. ..... (09)

13:37 ஒருவனையும் அல்லாது உணராது உள்ளம்
உணர்ச்சித் தடுமாற்றத்துள்ளே நின்ற
இருவரையும் மூவரையும் என்மேல் ஏவி
இல்லாத தரவு அறுத்தாய்க் கில்லேன் ஏலக்
கருவரைசூழ் கானல் இலங்கை வேந்தன்
கடுந்தேர் மீது ஓடாமைக் காலால் செற்ற
பொருவரையாய் உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே. ..... (10)

ஆலய முகவரி : அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர், திருப்புகலூர் அஞ்சல். வழி திருக்கண்ணபுரம், நாகப்பட்டிணம் வட்டம், நாகப்பட்டிணம் மாவட்டம், PIN - 609 704.

குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

show more

Share/Embed