02.012 திருக்கச்சியேகம்பம் | மறையானை மாசிலாப் புன்சடை | சம்பந்தர் தேவாரம் |
YouTube Viewers YouTube Viewers
26.8K subscribers
848 views
0

 Published On Sep 18, 2023

02.012 திருக்கச்சியேகம்பம் | மறையானை மாசிலாப் புன்சடை | திருஞானசம்பந்தர் தேவாரம்

#EkambareswararTemple(Kachi Ekambam) | #Kanchipuram | #ThirugnanasambantharPathigam

பஞ்சபூத தலங்களில் பூமித்தலமாக விளங்குவது காஞ்சீபுரம். இங்கு பிருத்வி லிங்கமாக சிவபெருமான் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார். மூல லிங்கம் மணலால் ஆனதால் இதற்கு அபிஷேகங்கள் செய்வது கிடையது. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறும்.

ஒருமுறை பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடிவிட்டார். இதன் காரணமாக எல்லா உலகங்களும் இருளில் மூழ்கின. உடனே சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து இருள் அகற்றினார். அம்பிகை விளையாட்டாக கண்களை மூடினாலும் அதனால் எல்லா ஜீவராசிகளுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்காக பூவுலகிற்குச் சென்று பிராயச்சித்தமாக தன்னை நோக்கி தவம் இயற்றுமாறு அம்பிகையைப் பணித்தார். அம்பிகையும் இந்த பூவலகிற்கு வந்து புனித தலமான இந்த காஞ்சீபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கிப் பூஜித்து வந்தார்.

அம்பிகை பார்வதியின் தவப்பெருமையை உலகிற்கு உணர்த்த சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி செய்தார். வெள்ளத்தில் மணல் லிங்கம் அடித்துச் செல்லாதபடி அம்பிகை லிங்கத்தை தழுவி கட்டிக்கொண்டார். அவ்வாறு உமையம்மை தழுவிய போது இறைவன் தன் திருமேனியில் அம்பிகையின் வளைத் தழும்பும் முலைச் சுவடும் ஏற்றுத் தழுவக் குழைந்தார். இவ்வாறு இறைவி இறைவனை வழிபட்ட இந்த வரலாறு திருக் குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்திலும், காஞ்சிப் புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் இறைவனுக்குத் தழுவக் குழைந்த நாதர் என்றும் பெயர்.

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஏகாம்பரநாதர், ஸ்ரீ தழுவக்குழைந்த நாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ ஏலவார்குழலி, ஸ்ரீ காமாட்சியம்மை

திருமுறை : இரண்டாம் திருமுறை 012 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

பதிக குரலிசை : திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார்

சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மகிழ மரத்தடியில் "உன்னைப் பிரியேன்" என்று சத்தியம் செய்து கொடுத்து திருமணம் செய்து கொண்டார். சிவபெருமானை சாட்சியாக வைத்து திருமணம் செய்து கொண்டு பின் திருவாரூர் செல்வதற்காக சங்கிலி நாச்சியாரைப் பிரிந்து திருவொற்றியூரில் இருந்து சத்தியத்தை மீறி புறப்பட்டதால் சுந்தரர் தனது இரு கண் பார்வையும் இழந்தார். அப்படி பார்வை இழந்த கண்களில் இடக்கண் பார்வையை சுந்தரர் காஞ்சீபுரம் தலத்தில் பதிகம் பாடி பெற்றார். பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "காணக் கண் அடியேன் பெற்றவாறே" என்று உள்ளம் உருகிப் பாடியுள்ளார். நல்ல தமிழ்ப் பாடலாகிய இக்கதிகத்திலுள்ள 10 பாடலகளையும் பாட வல்லவர் நன்னெறியால் பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர் என்றும் குறிப்பிடுகிறார்.

வேதமோடு சைவநீதி விளங்கவந்த கவுணியனார் காஞ்சியை அணைந்து, மதிற்புறத்தே சென்று சேர்ந்து வணங்கினார். அளவற்ற தொண்டர்கள் அஞ்சலித்து வாழ்த்திய ஒலி வானளாவப் பெருகிற்று. பூமாரியும், பொற்சுண்ணமும் புயல் போல் பொழிந்தன. காமக்கண்ணி தழுவக்குழைந்த கச்சியேகம்பரை, உருகிய அன்பு உள்ளலைப்பப் பருகிய மெய்யுணர்வினோடும் பாடியருளிய பதிகம் இது.

00:28 மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்
பிறையானை பெண்ணொடு ஆணாகிய பெம்மானை
இறையானை ஏர்கொள் கச்சித் திருஏகம்பத்து
உறைவானை அல்லது உள்காது எனது உள்ளமே. ..... (01)

02:02 நொச்சியே வன்னி கொன்றை மதி கூவிளம்
உச்சியே புனைதல் வேடம் விடை ஊர்தியான்
கச்சி ஏகம்பம் மேய கறைக் கண்டனை
நச்சியே தொழுமின் நும்மேல் வினை நையுமே. ..... (02)

03:49 பாராரும் முழவம் மொந்தை குழல் யாழ் ஒலி
சீராலே பாடல் ஆடல் சிதைவு இல்லதோர்
ஏரார் பூங்கச்சி ஏகம்பனை எம்மானை
சேராதார் இன்பமாய நெறி சேராரே. ..... (03)

05:22 குன்று ஏய்க்கும் நெடுவெண்மாடக் கொடி கூடிப்போய்
மின் தேய்க்கும் முகில்கள் தோயும் வியன் கச்சியுள்
மன்று ஏய்க்கும் மல்கு சீரால் மலி ஏகம்பம்
சென்று ஏய்க்கும் சிந்தையார்மேல் வினை சேராவே. ..... (04)

06:29 சடையானைத் தலை கை ஏந்திப் பலி தருவார்தம்
கடையே போய் மூன்றும் கொண்டான் கலிக் கச்சியுள்
புடையே பொன் மலரும் கம்பைக்கரை ஏகம்பம்
உடையானை அல்லது உள்காது எனது உள்ளமே. ..... (05)

07:20 மழுவாளோடு எழில்கொள் சூலப்படை வல்லார்தம்
கெழுவாளோர் இமையார் உச்சி உமையாள் கங்கை
வழுவாமே மல்கு சீரால் வளர் ஏகம்பம்
தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே. ..... (06)

08:09 விண்ணுளார் மறைகள் வேதம் விரித்து ஓதுவார்
கண்ணுளார் கழலின் வெல்வார் கரி காலனை
நண்ணுவார் எழில்கொள் கச்சிநகர் ஏகம்பத்து
அண்ணலார் ஆடுகின்ற அலங்காரமே. ..... (07)

09:40 தூயானைத் தூய வாய் அம்மறை ஓதிய
வாயானை வாள் அரக்கன் வலி வாட்டிய
தீயானைத் தீதில் கச்சித் திருஏகம்பம்
மேயானை மேவுவார் என் தலை மேலாரே. ..... (08)

10:44 நாகம் பூண் ஏறுது ஏறல் நறுங்கொன்றை தார்
பாகம் பெண் பலியும் ஏற்பர் மறை பாடுவர்
ஏகம்பம் மேவி ஆடும் இறை இருவர்க்கும்
மாகம்பம் அறியும் வண்ணத்தவன் அல்லனே. ..... (09)

11:39 போதியார் பிண்டியார் என்று இவர் பொய்ந்நூலை
வாதியா வம்மின் அம்மா எனும் கச்சியுள்
ஆதியார் மேவி ஆடும் திருஏகம்பம்
நீதியால் தொழுமின் நும்மேல் வினை நில்லாவே. ..... (10)

12:42 அந்தண் பூங்கச்சி ஏகம்பனை அம்மானை
கந்தண் பூங்காழி ஊரன் கலிக்கோவையால்
சந்தமே பாடவல்ல தமிழ் ஞானசம்
பந்தன் சொல் பாடி ஆட கெடும் பாவமே. ..... (11)

பதிகப் பலன் : அழகும் தண்மையும் பொலிவும் உடைய கச்சி ஏகம்பத்தில் விளங்கும் தலைவனைப் பற்றி, நீர் வளமும் தண்மையும் அழகும் உடைய சீகாழிப்பதியுள் தோன்றியவனாய் ஒலிமாலை எனப்படும் திருப்பதிகங்களால் இசைத்தமிழில் பாடவல்ல ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப் பாடல்களைப் பாடி ஆடிப் போற்றப் பாவம் கெடும்.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

show more

Share/Embed